சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி திட்டம் ஆணையக்குழு தலைவர் பேச்சு


சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி திட்டம் ஆணையக்குழு தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 12 Dec 2018 9:36 PM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக சிறுபான்மையின ஆணையக்குழு தலைவர் பேசினார்.

வேலூர், 

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் 15 அம்சத் திட்டம் குறித்து கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையக்குழு தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் இனத்தவருக்கென்று ஏற்கனவே உள்ள 30 சதவீத இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இஸ்லாமியர்களுக்கென 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் 1-வது முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இவ்வாரியத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 1,600 பதிவு பெற்ற உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் உள்ளனர். இதுவரையில் 334 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 250 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு மிகக்குறைந்த வட்டியில் பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையின மக்கள் பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பயணச்செலவு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும். வள்ளிமலையில் உள்ள ஜெயின் குகைக் கோவிலுக்கு பாதை அமைத்து ஜெயின் சமூகத்தினர் வழிபாடு நடத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் எஸ்.சையத் கமீல் சாஹிப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி கலெக்டர்கள் மெகராஜ், இளம்பகவத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story