வத்தலக்குண்டுவில்: குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு அருகே கோம்பைப்பட்டி ஊராட்சி மேலக்கோவில்பட்டி இந்திராநகரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இதுதவிர காவிரி நீரும் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது. இதுதவிர காவிரி குடிநீர் ஒரு குடும்பத்தினருக்கு 5 குடம் மட்டுமே கிடைக்கிறது. இது பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்தும் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மருதம் மக்கள் கழகம் மண்டல செயலாளர் கனகராஜ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்துக்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்றும், அதுவரை லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story