தஞ்சையில் போலி மது தயாரித்த 6 பேர் கைது 4 ஆயிரம் மதுபாட்டில்கள், 2 கார்கள் பறிமுதல்


தஞ்சையில் போலி மது தயாரித்த 6 பேர் கைது 4 ஆயிரம் மதுபாட்டில்கள், 2 கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Dec 2018 11:00 PM GMT (Updated: 12 Dec 2018 5:37 PM GMT)

தஞ்சையில் போலி மது தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்ததுடன், 4 ஆயிரம் மதுபாட்டில்கள், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள சோழன் நகரில் ஒரு வீட்டில் போலி மது தயாரிக்கப்படுவதாக வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவர், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் தனிப்படை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் போலி மது தயாரிக்கப்படுவதாக கூறப்பட்ட வீட்டிற்குள் அதிரடியாக போலீசார் நுழைந்தனர். அங்கு மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. காலி பாட்டில்கள், மூடிகள், பல்வேறு மதுபான நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள், மது தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், எந்திரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இவைகளை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் இருந்த 6 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தஞ்சை வடக்கு ஆஜாரம் பாக்கெட் ராஜா(வயது 40), கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நாபாளையம் சீராளன்(20), மணத்தட்டை சுமன்(20), தஞ்சை கொண்டிராஜபாளையம் சாமந்தகுளம் ராஜா(24), கொத்துவால்சாவடி ராகுல்(23), வல்லம் சிவன் கோவில் தெரு பிரகாஷ்(30) ஆகியோர் என்பதும், இவர்கள் புதுச்சேரியில் இருந்து மது தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து போலி மது தயாரித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், 4 ஆயிரம் மதுபாட்டில்கள், 3 ஆயிரத்து 750 காலி பாட்டில்கள், 350 லிட்டர் ஸ்பிரிட், 10 ஆயிரம் மாத்திரைகள், ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், மது தயாரிக்க பயன்படுத்திய பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். மேலும் 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து இங்கு தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் வேறு எங்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான பாக்கெட் ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார். ஒரு வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது புதுச்சேரியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்கள் ஆனார்கள். அப்போது புதுச்சேரியில் மது தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகிறது. அவற்றை வாங்கி மது தயாரிக்கலாம் என திட்டம் போட்டனர். கடந்த ஜூன் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த பாக்கெட் ராஜா தனது உறவினர்கள், நண்பர்கள் மூலம் மது தயாரிக்க முடிவு செய்தார்.

இதற்காக பல நாட்களாக வீட்டை வாடகைக்கு எடுக்க பல்வேறு இடங்களை தேடினர். இறுதியில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். புதுச்சேரியில் இருந்து மது தயாரிக்க தேவையான ரசாயன கலவை, பொருட்களை வாங்கி வந்தனர். இவர்கள் வாடகைக்கு எடுத்த வீட்டை சுற்றிலும் ஏராளமான வீடுகள் இருந்தன. இங்கு மது தயாரித்தால் எளிதாக மக்களுக்கு தெரிந்து விடும் என வேறு இடத்தில் வீடு தேட முயற்சி செய்தனர்.

அப்போது தான் பிள்ளையார்பட்டி விரிவாக்க பகுதி சோழன் நகரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு சொந்தமான வீடு வாடகைக்கு விடப்படும் தகவல் கிடைத்தது. அந்த வீட்டை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வாடகைக்கு எடுத்தனர். ஏற்கனவே வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் இந்த வீட்டிற்கு மாற்றினர். இதையடுத்து மது தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. புதுச்சேரியை சேர்ந்தவரையும் பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story