நாமக்கல்லில் அரசு அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
நாமக்கல்லில் அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல்-மோகனூர் சாலை குன்னிமரத்தான் கோவில் அருகே வசித்து வருபவர் ராஜசேகர் (வயது 58). இவர் சேலத்தில் பட்டு வளர்ச்சித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (55). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலையில் தேன்மொழி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்று விட்டார். பணி நிமித்தமாக சென்னை சென்று இருந்த ராஜசேகர் நேற்று பிற்பகல் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து ராஜசேகர் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பாக ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு அதிகாரி வீட்டில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story