பெரம்பலூரில் சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2018 11:00 PM GMT (Updated: 12 Dec 2018 7:18 PM GMT)

பெரம்பலூரில் சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் அரசு பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் எறையூர் சர்க்கரை ஆலையின் 41-வது பங்குதாரர்களின் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சர்க்கரை துறை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ரீட்டா ஹரீஸ்தக்கர் தலைமை தாங்கி னார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கரும்பு விவசாயிகள் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.32 கோடி வழங்காததை கண்டித்தும், கடந்த 3 ஆண்டுகளாக கரும்புக்கான விலை அறிவிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பேரவை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் கூட்டத்தைவிட்டு வெளியே வந்த விவசாயிகள் தங்களது தலையில் முக்காடு போட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலையில் முக்காடு போட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு விவசாயி பிரதமர் உருவத்திலும், ஒரு விவசாயி முதல்-அமைச்சர் உருவத்திலும் வேடமிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு வருவாய் பங்கீட்டு சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றி உள்ளது. கரும்பு உற்பத்தி செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளாத இச்சட்டம் விவசாயிகளுக்கு பாதகமானது. ஆனால், ஆலை முதலாளிகளுக்கு சாதகமானது ஆகும்.

1980-ம் ஆண்டு முதல் மாநில அரசு வழங்கி வந்த பரிந்துரை விலையை நிறுத்திவிட்டு இனிமேல் மத்திய அரசு அறிவிக்கும் விலை மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும். 2018-19 கரும்புக்கு 9.5 சதவீதம் ரெக்கவரிக்கு ரூ.2 ஆயிரத்து 612 தான் விலையென மத்திய அரசு அறிவித்துள்ளது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 750 கொடுக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஒரு டன்னுக்கு ரூ.138 குறைவாக கிடைக்கப்போகிறது. உரத்தின் விலை, டீசல் விலை பல மடங்கு உயர்ந்து வரும் சூழலில் கரும்புக்கு மட்டும் விலை குறைத்து கொடுக்கப்போவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்துசெய்து விட்டு உற்பத்திச்செலவை கணக்கிட்டு பழைய முறையின் அடிப்படையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் என அறிவிக்க வேண்டும். மேலும் சர்க்கரைத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வருகிற 2019 ஜனவரி மாதம் முதல் இணை மின் திட்டத்தையும், ஆலை நவீனப்படுத்தும் திட்டத்தையும் தாமதப்படுத்தாமல் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story