கொங்கணாபுரத்தில் கலெக்டரிடம் ‘ஈவ் டீசிங்’ புகார் கூறிய மாணவி தற்கொலை முயற்சி அண்ணன்- 2 தம்பிகள் கைது
‘ஈவ் டீசிங்‘ குறித்து சேலம் மாவட்ட கலெக்டரிடம் புகார் கூறிய மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக அண்ணன், 2 தம்பிகளை போலீசார் கைது செய்தனர்.
எடப்பாடி,
கொங்கணாபுரத்தை அடுத்த சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த கோமதி, கொங்கணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். பள்ளிக்கு வரும் வழியில் சிலர் ‘ஈவ் டீசிங்‘ செய்ததாக கூறி, கொங்கணாபுரத்தில் நேற்று முன்தினம் ஆய்வுக்கு வந்த கலெக்டர் ரோகிணியிடம் மாணவி கோமதி கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவியை கேலி கிண்டல் செய்தவர்கள் மீண்டும் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று புகாரை திரும்ப பெற சொல்லி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த கோமதி நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரது உறவினர்கள் மாணவியை சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சடையம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 46), அவருடைய தம்பிகள் சரவணன் (43), நடராஜ் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story