சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் புத்தக திருவிழா கண்காட்சி-விற்பனை நாளை தொடங்குகிறது


சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் புத்தக திருவிழா கண்காட்சி-விற்பனை நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Dec 2018 10:00 PM GMT (Updated: 12 Dec 2018 7:52 PM GMT)

சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நாளை தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்காகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையிலும் “தெய்வீகம்” சார்பில் ஆண்டுதோறும் ஜூலை, டிசம்பர் மாதங்களில் புத்தக திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான புத்தக திருவிழா கண்காட்சி, “சேலம் புக் பேர்-2018” என்ற பெயரில் சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழா கண்காட்சி-விற்பனை வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தக திருவிழாவையொட்டி சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் 50-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஸ்டால்களில் ஆன்மிகம், மருத்துவம், பொறியியல், பொது அறிவு, அறிவியல், கலை, கதை, கணிப்பொறி, விளையாட்டு போன்ற அனைத்து வகை புத்தகங்களும் இடம் பெறுகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் புத்தக பிரியர்களுக்காக அனைத்து புத்தகங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தக கண்காட்சி-விற்பனை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.

அனைவருக்கும் அனுமதி இலவசம். சேலம் மாவட்டத்தை சேர்ந்த புத்தக பிரியர்கள் இந்த புத்தக திருவிழா மற்றும் கண்காட்சிக்கு வந்து பயன்பெறலாம் என்று புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி தெரிவித்தார்.

இந்த புத்தக திருவிழா கண்காட்சியில் “தினத்தந்தி” பதிப்பக புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. அதாவது இதற்காக சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டு, அங்கு “தினத்தந்தி” பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தமிழ் சினிமா வரலாறு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு ஆகிய புத்தகங்கள் 20 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும்.

அதேபோல், வரலாற்றுச் சுவடுகள், இலங்கை தமிழர் வரலாறு, ஆயிரம் ஆண்டு அதிசயம், மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், புதையல் ரகசியம், ஆளுமைத்திறன், பரபரப்பான வழக்குகள், சிறகை விரிக்கும் மங்கள்யான், கலாம் ஒரு சரித்திரம், ஆளுமைத்திறன், உலகை உலுக்கிய வாசகங்கள், நம்ப முடியாத உண்மைகள், 17 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள் உள்பட பல்வேறு புத்தகங்கள் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Next Story