கோவையில் இருந்து முதன்முறையாக; சரக்கு விமானத்தில் 15 டன் எந்திரத்தை அனுப்பி சாதனை
கோவையில் இருந்து முதன்முறையாக தனி சரக்கு விமானத்தில் 15 டன் எடையுள்ள எந்திரம் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டது.
கோவை,
கோவை சர்வதேச விமான நிலையம் வழியாக வந்து செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவையில் இருந்து என்ஜினீயரிங், ஜவுளி பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கோவையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு காய்கறிகள் அடிக்கடி அனுப்பப்பட்டு வருகின்றன.இதன் மூலம் கோவையில் இருந்து விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவை விமான நிலையத்தின் ஓடுதளம் சிறியதாக இருப்பதால் சரக்கு விமானங்கள் வரமுடியவில்லை. எனவே விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டால் தான் பெரிய சரக்கு விமானங்கள் இங்கு வர முடியும்.
இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத் துக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மத்திய அரசு நிறுவனம் பெரிய மெக்கானிக்கல் கியர் பாக்ஸ் செய்ய ஆர்டர் கொடுத்திருந்தது. அந்த எந்திரம் தயாரான பிறகு அதை லாரி அல்லது கப்பல் மூலம் தான் அனுப்ப முடியும். ஆனால் இதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால் கவுகாத்தியை சேர்ந்த மத்திய அரசு நிறுவனம் அந்த கியர் பாக்சை சரக்கு விமானம் மூலம் கொண்டு வர முடிவு செய்தது.
இதற்காக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டை சேர்ந்த பெரிய சரக்கு விமானம் கோவை வந்தது. கோவை சிங்காநல்லூரில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 15 டன் எடை உள்ள கியர் பாக்சை கண்டெய்னர் லாரி மூலம் விமான நிலையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் அந்த எந்திரம் கிரேன் மூலம் சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டது. இதுகுறித்து கோவை விமான நிலைய சரக்கு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கியர் பாக்ஸ் பத்திரமாக கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்காக சர்வதேச அளவில் சரக்குகளை கையாளும் நிறுவனத்தை கவுகாத்தி நிறுவனத்தினர் அணுகினார்கள். அவர்கள் உடனடியாக ஐ.எல். 76 என்ற ரக சரக்கு விமானத்தை கோ வைக்கு கொண்டு வந்தனர். அந்த விமானத்தில் 40 டன் வரை சரக்குகளை ஏற்ற முடியும். அதில் 15 டன் எடையுள்ள கியர் பாக்ஸ் ஏற்றப்பட்டு கவுகாத்திக்கு 6 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டது.
அந்த கியர் பாக்சை லாரி மூலம் கொண்டு சென்றால் அதிக நாட்கள் ஆவதோடு மட்டுமல்லாமல் சேதமடையவும் வாய்ப்பு உள்ளது. அதற்காக தான் அந்த கியர் பாக்சை கொண்டு செல்வதற்காக மட்டும் சரக்கு விமானம் கோவை கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை விமான நிலைய வரலாற்றில் முதன்முறையாக சரக்கு அனுப்புவதற்காகவே வெளிநாட்டில் இருந்து விமானம் வாடகைக்கு கொண்டு வரப்பட்டு அதில் 15 டன் எடையுள்ள சரக்கு அனுப்பி சாதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story