கோவையில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: வறுமை காரணமாக மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது அம்பலம் - உடந்தையாக இருந்த பெண்ணுக்கு வலைவீச்சு; திடுக்கிடும் தகவல்கள்


கோவையில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: வறுமை காரணமாக மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது அம்பலம் - உடந்தையாக இருந்த பெண்ணுக்கு வலைவீச்சு; திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:30 AM IST (Updated: 13 Dec 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ.25 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்ற தம்பதி வறுமை காரணமாக மேலும் 3 குழந்தைகளை விற்றது அம்பலமாகி உள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை, 

கோவை அருகே உள்ள சூலூர் மயிலம்பட்டி கரையான்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 37). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயலட்சுமிக்கு கடந்த 6-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை அவர் கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.25 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. இதுகுறித்து சைல்டுலைன் அமைப்பை சேர்ந்த உமா, ஏஞ்சலின், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரெஸ்லின் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் குழந்தையை வாங்கிய தம்பதியிடம் இருந்து சைல்டுலைன் அமைப்பினர் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜெயலட்சுமி- வெங்கடேஷ் தம்பதிக்கு ஏற்கனவே பிறந்த 6 குழந்தைகளில் 3 குழந்தைகளை சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மதுரையில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

வெங்கடேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட வறுமை காரணமாக குழந்தையை விற்பனை செய்துள்ளனர். ஒரு குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கும், ஒரு குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கும் விற்றுள்ளனர். மற்றொரு குழந்தையை தங்களது உறவுப்பெண் ஒருவரிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

ஜெயலட்சுமிக்கு குழந்தைகளை விற்று கொடுப்பதில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் புரோக்கராக செயல்பட்டுள்ளார். ஜெயலட்சுமி போலீசில் சிக்கியதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சைல்டுலைன் அமைப்பு சார்பில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. அதன் பேரில் தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலட்சுமி ஏற்கனவே விற்பனை செய்ததாக கூறப்படும் குழந்தைகள் தற்போது எவ்வாறு உள்ளன? ஜெயலட்சுமியிடம் குழந்தைகளை வாங்கி விற்றது போல் பெண் புரோக்கர் வேறு பெண்களிடமும் குழந்தைகளை வாங்கி விற்றாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண் பிடிபட்டால் பல தகவல்கள் வெளியாகும் என்பதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட ஆண் குழந்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் பராமரிக்கப்படுகிறது.

உக்கடத்தில் உள்ள டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் குழந்தையை ஒப்படைக்க இருப்பதாக சைல்டுலைன் அமைப்பினர் தெரிவித்தனர். கோவையில் பெற்ற குழந்தைகளை தம்பதி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story