அரக்கோணம் அருகே 7 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
அரக்கோணம் அருகே 7 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே காவனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டாள்குட்டை கரையோரம் உள்ள இருளர் காலனியில் 15 இருளர் குடும்பங்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று காலை வழக்கம் போல் இருளர் காலனியில் வசித்து வந்தவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டும் வீட்டில் இருந்தனர். அதே பகுதியில் வசித்து வந்த துரை என்பவரின் குடிசை வீட்டில் நேற்று பிற்பகல் திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து அலறி கூச்சலிட்டனர். அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் வரிசையாக இருந்த 6 வீடுகளில் தீ வேகமாக பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதற்குள் 7 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த ஒரு ஆடு, அதன் குட்டியும் கருகி இறந்தது. மேலும் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்கள், சைக்கிள்கள் எரிந்து சாம்பலானது.
சம்பவ இடத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏவுமான சு.ரவி, தாசில்தார் பாபு, வட்ட வழங்கல் அலுவலர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அரக்கோணம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், கிராம உதவியாளர் ஏகாம்பரம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா 10 கிலோ அரிசி, 3 லிட்டர் மண்எண்ணெய், வேட்டி, சேலை மற்றும் தனது சொந்த பணத்தில் இருந்து 7 குடும்பங்களுக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 500 வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் காவனூர் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். விசாரணையில் துரை, கவுரி, வனிதா, பாலு, மீனா, சேகர் ஆகியோர்களின் குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்லானது தெரிய வந்தது.
தீ விபத்தில் ஒரே நேரத்தில் 7 குடிசை வீடுகள் சாம்பலான சம்பவம் காவனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story