நவல்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்


நவல்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

நவல்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவெறும்பூர்,

திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு வழியாக திருச்சிக்கு வாகனங்களில் மணல் கடத்தி செல்லப்படுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மாத்தூர் ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை கண்காணித்தனர். அப்போது ஒரு லாரி வேகமாக வந்தது. லாரிக்கு முன்னால் பாதுகாப்புக்காக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடி விட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், ஒருவர் வடக்கு வீரம்பட்டியை சேர்ந்த சோக்கு மகன் சிவலிங்கம் என்பதும், மற்றொருவர் மாத்தூர் தென்னம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மணி (வயது 44) என்பதும், புதுக்கோட்டை மாவட்டம் லட்சம்பட்டியில் உள்ள குளத்து வாரியில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி திருச்சிக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது. அதன்பேரில், அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் வேகமாக வந்த ஒரு லாரியையும், லாரிக்கு முன்னால் பாதுகாப்புக்காக வந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் நிற்கும்படி போலீசார் ‘சைகை’ காட்டினர். போலீசாரை கண்டதும் அவர்கள் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

அந்த லாரியில் போலீசார் சோதனை செய்த போது அதில் மணல் ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த லாரியையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story