மூதாட்டி இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: குடிபோதையில் மருமகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்


மூதாட்டி இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: குடிபோதையில் மருமகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 13 Dec 2018 3:30 AM IST (Updated: 13 Dec 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக குடிபோதையில் மருமகனே அவரை தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வரதராஜபுரம் தோட்டத்து வீட்டில் வசித்தவர் ராமுத்தாய் (வயது 65). இவருடைய கணவர் வெங்கிடுசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் வீட்டில் ராமுத்தாய் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு வீட்டின் அருகே படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமுத்தாய் பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் ராமுத்தாயை நகைக்காக யாரோ அடித்துக்கொலை செய்துவிட்டனர் என்று, அவருடைய மருமகன் முத்தையா (52) எரியோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ராமுத்தாய் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு முன்பு ராமுத்தாயின் வீட்டுக்கு அவருடைய மருமகன் வந்து சென்றதாகவும், அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் முத்தையாவை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

சம்பவத்தன்று குடிபோதையில் மாமியாரின் வீட்டுக்கு சென்றதால் அவருக்கும் எனக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டின் அருகே கிடந்த இரும்பு கம்பி மற்றும் கட்டையால் அவரை தாக்கியதாவும் தெரிவித்தார். இதையடுத்து முத்தையாவை போலீசார் கைது செய்தனர். மாமியாரை, மருமகனே அடித்துக்கொன்றுவிட்டு போலீசில் நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story