ஆண்டிப்பட்டி அருகே: டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் மதுகுடித்ததால் பரபரப்பு


ஆண்டிப்பட்டி அருகே: டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள் மதுகுடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 10:30 PM GMT (Updated: 12 Dec 2018 10:05 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அதை முற்றுகையிட்ட பெண்கள் மது குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளான டி.பொம்மிநாயக்கன்பட்டி, திம்மரசநாயக்கனூர் கிராமங்களை சேர்ந்த குடிமகன்கள் இந்த கடையில் வந்து மதுபானங்கள் வாங்கி குடித்துவிட்டு செல்கின்றனர். மதுகுடித்துவிட்டு செல்பவர்கள் விபத்தில் சிக்குவது இந்த பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும் டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மதுவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

எனவே அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் டி.சுப்புலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என கோரி அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என மதுபாட்டில்களை கையில் ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும், மாவட்ட கலெக்டர் வரும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். அதில் 2 பெண்கள் திடீரென மதுபாட்டிலின் மூடியை திறந்து குடிக்க ஆரம்பித்தனர். சிறிதளவு மதுவை குடித்தவுடன் மேலும் குடிக்க முடியாமல் கீழே துப்பினர். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட வந்த பெண்கள் மது குடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று(நேற்று) டாஸ்மாக் கடையை மூடுவதாக கூறினர். ஆனால் ஒருநாள் மட்டும் மூடினால் போதாது, நிரந்தரமாக கடையை மூடவேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தான் முடிவெடுக்க முடியும் என்றும் பெண்களின் கோரிக்கை குறித்து கலெக்டருக்கும், அரசுக்கும் பரிந்துரை செய்வதாக போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண்கள் போராட்டம் காரணமாக டி.சுப்புலாபுரம் டாஸ்மாக் கடை நேற்று அடைக்கப்பட்டது.

Next Story