தமிழக அரசின் உத்தரவுப்படி விருதுநகர் நகராட்சி பகுதியில் சொத்து வரியை ஒரே சீராக உயர்த்த வேண்டும்; இடையில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய கோரிக்கை


தமிழக அரசின் உத்தரவுப்படி விருதுநகர் நகராட்சி பகுதியில் சொத்து  வரியை ஒரே சீராக உயர்த்த வேண்டும்; இடையில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 12 Dec 2018 10:30 PM GMT (Updated: 12 Dec 2018 10:27 PM GMT)

விருதுநகர் நகராட்சி பகுதியில் தமிழக அரசு உத்தரவுப்படி குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரே சீராக வரியை உயர்த்த வேண்டும் என்றும், இடையில் செய்த வரி விதிப்பு மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழக உள்ளாட்சித்துறை மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி பகுதியில் சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளிலும், சொத்துவரியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் நகராட்சியை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொத்து வரி விதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை அளவீடு செய்து மாற்றம் செய்தது. இதன்படி ஒரு வருடத்துக்கு ரூ.622 என வரி விதிக்கப்பட்டிருந்த குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.5002 என வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.720 வரி விதிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.5500 என வரிவிதிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி விதிப்புடன் குப்பை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சுமார் 8 முதல் 10 மடங்கு வரை வரி உயர்வு செய்துள்ளதால் வரி கட்ட வேண்டியவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் இந்த அளவீடு செய்யப்படவில்லை. ஒரு சில பகுதிகளிலேயே குடியிருப்பு பகுதிகள் அளவீடு செய்யப்பட்டு சொத்து வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அரசு ஒரே சீராக சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், வரி விதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அளவீடு செய்வதை நிறுத்திவிட்ட நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் தங்கள் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவன கட்டிடத்தின் விபரங்களை தெரிவிக்குமாறு ஒரு படிவத்தையும் வழங்கி உள்ளது.

தமிழக அரசு, அனைத்து குடியிருப்புகளுக்கும் 50 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரியை உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவன கட்டிடங்களின் விவரங்களை தெரிவிக்குமாறு கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை.

மேலும் அளவீடு செய்து சொத்துவரி மாற்றம் செய்துள்ளவர்களுக்கு 8 முதல் 10 மடங்கு வரை வரி உயர்வு செய்துள்ள நிலையில் மற்றவர்களுக்கு அரசு உத்தரவிட்டப்படி 50 மற்றும் 100 சதவீத வரி உயர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நகர மக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகம், தேவையற்ற சட்டப்பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் அனைத்து குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இடையில் செய்த சொத்து வரி மாற்றங்களை ரத்து செய்துவிட்டு அரசு உத்தரவிட்டுள்ளப்படி ஒரே சீராக 50 மற்றும் 100 சதவீத சொத்துவரி உயர்வை அமுல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியை உடனடியாக கட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

தமிழக அரசும் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள நகராட்சி நிர்வாகம் சொத்துவரி உயர்வில் குழப்பங்களை ஏற்படுத்தினால் கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படும். அப்படி சென்றால் வரி வசூல் செய்வதில் தடை ஏற்படும் நிலை உண்டாகிவிடும். இதனால் நகராட்சிக்கு மேலும் நிதி நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகிவிடும்.


Next Story