சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மராட்டிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை; ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மராட்டிய இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மராட்டிய மாநிலம், சில்லிபண்டாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் அபிஷேக் (வயது 20). இவர் சிவகாசி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நூற்பு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் அதே ஆலையில் குடும்ப வறுமை காரணமாக வேலை பார்த்து வந்த 17 வயது பெண்ணை காதலித்து உள்ளார். பின்னர் திருமண ஆசை காட்டி அந்தப் பெண்ணை கடந்த 2015–ம் ஆண்டு மும்பைக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை சிவகாசி பஸ் நிலையத்தில் விட்டு விட்டு அபிஷேகம் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து அந்தப் பெண்ணின் தாயார் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அபிஷேக்கை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி, அபிஷேக்கிற்கு, ஆசை வார்த்தை கூறிய குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனையும், கற்பழித்தல் குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழான குற்றத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.