காரியாபட்டியில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்; பெண்கள் கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தல்
காரியாபட்டியில் அரசு பெண்கள் கல்லூரி மற்றும் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று சமம் பெண்கள் கூட்டமைப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி ‘சமம்’ பெண்கள் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் 10–வது ஆண்டு விழா மற்றும் விழிப்புணர்வு மாநாடு ஸ்ரீ சபரி நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காரியாபட்டி யூனியன் முன்னாள் தலைவர் ராமமூர்த்தி ராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரேசன் முன்னிலை வகித்தார். ‘சமம்’ தலைவர் தனலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் சிறப்பு மலரை வெளியிட அதை துணை ஆட்சியர் சவுந்தர்யா பெற்றுக் கொண்டார்.
விழாவில் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு “பெண்ணுக்குள் ஞானம் வைத்தான்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் காரியாபட்டி வட்டார அளவில் நடைபெற்ற திறன் அறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் 65 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை ‘சமம்’ நிறுவனர் ஞானபாக்கியம் வழங்கினார். விழாவில் ‘சமம்’ பொதுச் செயலாளர் பாப்பாத்தி தீர்மானங்கனை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
காரியாபட்டியைச் சுற்றி உள்ள 165 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உயர்கல்விக்காக மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காரியாபட்டியை மையமாகக் கொண்டு அரசு பெண்கள் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பு கருதி மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும், காரியாபட்டி தனித் தாலுகாவாக உள்ளதால் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்க வேண்டும், அனைத்து சுய உதவிக்குழுக்களுக்கும் வங்கி இணைப்பு கடன் 4 சதவீத வட்டியுடன் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் மாவட்ட நூலகர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில், உமாவதி, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, சபரி நேஷனல் பள்ளி நிறுவனர் தேவராஜ், தொழிலதிபர் பாலமுருகன், அறிவொளி கருத்தாளர் மாயமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சமம் பொருளாளர் ஆதிலட்சுமி நன்றி கூறினார். கல்பனா பழனிவேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.