விமானப்படை தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைகோள் 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது


விமானப்படை தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைகோள் 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது
x
தினத்தந்தி 13 Dec 2018 3:58 AM IST (Updated: 13 Dec 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

விமானப்படை தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’ என்ற செயற்கைகோள் வருகிற 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

பெங்களூரு,

இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-7ஏ செயற்கைகோளை இஸ்ரோ வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவுவதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 2,250 கிலோ எடையில் ஜிசாட்-7ஏ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளோம். இதனை அடுத்த வாரம் ‘ஜி.எஸ்.எல்.வி- எப் 11’ ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ‌ஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்.

ஜிசாட்-7ஏ செயற்கைகோளில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதனுடைய ஆயுட்காலம் 8 ஆண்டுகள். இது இஸ்ரோ தயாரித்துள்ள 35-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். பல்வேறு இடங்களில் உள்ள இந்திய விமானப்படைக்கான ரேடார் நிலையங்களை இந்த செயற்கைகோள் மூலம் இணைக்க முடியும்.

ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விமானப்படையின் போர்த்திறன்களை அதிகரிப்பதுடன், உலகளாவிய நடவடிக்கைகளையும் அதிகளவில் தெரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். 2013-ம் ஆண்டு ‘ஜிசாட்-7’ என்ற செயற்கைகோள் கடற்படைக்காக தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது முறையாக ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைகோளை தயாரித்து விமானப்படைக்காக அர்ப்பணிக்க இருக்கிறது.

இதற்கான ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 7-வது ராக்கெட்டாகும். தகவல் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ‘இன்சாட் 4சிஆர்’ செயற்கைகோளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடைய இருப்பதால், அதற்கு மாற்றாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது பிரெஞ்சு கயானாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்.

தொடர்ந்து சந்திரயான் விண்கலமும் அடுத்த மாதம் 3-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 13-ந்தேதிக்குள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது பூமியை 320 ராணுவ செயற்கைகோள்கள் சுற்றிவருகின்றன. அதில் 13 இந்தியாவுக்கு சொந்தமானவை. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.



Next Story