கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்: சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு


கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்: சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 10:45 PM GMT (Updated: 12 Dec 2018 10:36 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்,

கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மடிக்கணினிகளுக்கு இணையதள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், மாவட்ட கலந்தாய்வு ஒரேநாளில் நடத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி ஏற்கனவே ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், தாலுகா அலுவலகங்களில் இரவுநேர காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் 3–ம் கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் ‘மக்களை தேடி’ என்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். திருப்பரங்குன்றம் தாலுகாவில் சங்க தலைவர் பெரியசாமி தலைமையில் பொதுமக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர். இதில் கோட்ட பொறுப்பாளர் கந்தவேல், செயலாளர் கதிரேசன், பொருளாளர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ், பிரசார ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்பீட்டர் கென்னடி, அழகன், முத்துச்சாமி, ராஜாங்கம், தேவராஜன், அழகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட தாலுகாக்களிலும் மற்றும் மதுரை நகர் பகுதியிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்தால் மதுரை மாவட்டத்தில் கடந்த 27–ந் தேதி முதல் ஆன்லைன் சான்றிதழ் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் கையொப்பம் போடாத நிலை நீடிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை பெற முடியாமல் அவதியடைகின்றனர். இதுதவிர பொதுமக்களுக்கும் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story