“கஜா புயல் சேத அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்?” மத்திய அரசு வக்கீலிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி


“கஜா புயல் சேத அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்?” மத்திய அரசு வக்கீலிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
x
தினத்தந்தி 13 Dec 2018 4:30 AM IST (Updated: 13 Dec 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

‘‘கஜா புயல் சேத அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்?’’ என்று மத்திய அரசு வக்கீலிடம், மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை,

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். புயலில் சாய்ந்த தென்னை ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில், ‘கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாகவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். புயல் நிவாரண பணிகள் குறித்து தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, புயலால் பாதித்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், புயல் பாதிப்பு ஆதாரங்கள் இல்லை என்பதற்காக நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பக்கூடாது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழு தனது இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் கதிர்வேலு ஆஜராகி, ‘‘மத்திய குழுவின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு சில விளக்கங்களை தமிழக அரசிடம் கேட்டு இருந்தோம். ஆனால் அதுதொடர்பாக தமிழக அரசு உரிய பதிலை இன்னும் அளிக்கவில்லை. இதனால் தான் அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் ஆகிறது’’ என்று தெரிவித்தார்.

‘‘விளக்கம் அளிக்க தாமதம் ஆவது ஏன்?’’ என்று தமிழக அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர் இன்றைக்குள் பதில் அளிக்கப்படும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘சேதமதிப்பு தொடர்பான மத்திய குழுவின் அறிக்கையை எப்போது தாக்கல் செய்வீர்கள்?’’ என மத்திய அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 17–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story