பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெங்களூருவில் குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை - சட்டசபையில் பரமேஸ்வர் தகவல்


பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெங்களூருவில் குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை - சட்டசபையில் பரமேஸ்வர் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:47 PM GMT (Updated: 12 Dec 2018 10:47 PM GMT)

பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெங்களூருவில் குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் யஷ்வந்தபுரம் தொகுதி உறுப்பினர் சோமசேகர் கேட்ட கேள்விக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பதிலளிக்கையில் கூறிய தாவது:-

பெங்களூருவின் பரப்பளவு 250 சதுர கிலோ மீட்டராக இருந்தது. நகரம் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு அது 800 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. நகரில் தினமும் 5,500 டன் குப்பைகள் சேருகின்றன.

பெங்களூரு, குப்பை நகரம் என்ற பெயரை பெற்றது. இந்த குப்பை பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, அங்கு குப்பைகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை நேரில் ஆய்வு செய்தேன். குப்பையை ஒரு இடத்தில் போட்டு கிடங்கு அமைப்பதை விட, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் பிரான்ஸ் நாட்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து நான் ஆய்வு செய்தேன். அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால், குப்ைப பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

முன்னதாக பேசிய உறுப்பினர் சோமசேகர், “யஷ்வந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட கன்னஹள்ளி, சீகேஹள்ளி, தொட்டபிதரகல்லு, நிங்கதீரனஹள்ளி, சுப்பராயனபாளையா ஆகிய பகுதிகளில், குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. குமாரசாமி அங்கு பிரசாரம் செய்தபோது, அந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை அந்த குப்பை கிடங்கை மாற்றவில்லை” என்றார்.



Next Story