அம்பானி மகள் திருமணம் : ஆடம்பரமாக நடந்தது


அம்பானி மகள் திருமணம் : ஆடம்பரமாக நடந்தது
x
தினத்தந்தி 13 Dec 2018 5:53 AM IST (Updated: 13 Dec 2018 5:53 AM IST)
t-max-icont-min-icon

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது.

மும்பை, 

முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் இந்த திருமணம் நடந்தது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்தது. மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்தது. பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி இருந்தன.

இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஆன செலவு மட்டும் ரூ.3 லட்சம் என்றும், ரூ.722 கோடிக்கும் மேல் திருமண செலவு என்றும் கூறப்பட்ட நிலையில் வெகு ஆடம்பரத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.

திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், ஐஸ்வர்யாராய், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்பட பல்வேறு பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பிரபலங்களின் அணிவகுப்பால் மும்பையே பரபரப்பாக காணப்பட்டது.

முன்னதாக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடந்த திருமண சடங்குகளில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் திரண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story