விழுப்புரம் அருகே: ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி - உடலை மீட்பதில் தாமதமானதால் உறவினர்கள் மறியல்
விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடலை மீட்பதில் தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே உள்ள உலகலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் நவீன்குமார் (வயது 13). இவன் தொரவி கிராமத்தில் உள்ள தனது பாட்டி இந்திராணி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நவீன்குமார் தனது நண்பர்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் மாலை 5 மணி ஆகியும் நவீன்குமார் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவனின் உறவினர்கள் அந்த ஏரிக்கு விரைந்து சென்று தேடிப்பார்த்தனர். இருப்பினும் மாணவனை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் மாணவன் நவீன்குமார், ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது இரவு 7 மணி ஆகிவிட்டதால் ஏரியில் இறங்கி சிறுவனை தேடுவது சிரமம், எனவே மறுநாள் காலையில் வருவதாக தீயணைப்பு துறையினர் கூறினர். ஆனால் நேற்று காலை 8 மணி ஆகியும் தீயணைப்பு துறையினர் வரவில்லை.
இதனால் மாணவனின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அவனது உறவினர்கள் காலை 8 மணியளவில் தொரவி பஸ் நிறுத்தம் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழுதாவூர்- முண்டியம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் அவர்கள் தொரவி ஏரிக்கு வந்து மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து காலை 8.45 மணியளவில் பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதனிடையே சுமார் 1 மணி நேரம் போராடி மாணவன் நவீன்குமாரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மாணவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து, நவீன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story