சாயர்புரம் வட்டார பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி


சாயர்புரம் வட்டார பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 14 Dec 2018 4:30 AM IST (Updated: 13 Dec 2018 10:22 PM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் வட்டார பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாயர்புரம்,

சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம், சக்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம் ஆகிய ஊர்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் பயிரிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பயிரிடப்பட்ட மஞ்சள் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள செம்மண் நிலம் மஞ்சள் பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாகும். இதனால் பல தலைமுறைகளாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது.மஞ்சள் 6 மாத பயிர் என்பதால், ஆடி மாதம் நிலங்களை உழவு செய்து, மஞ்சள் கிழங்குகளை நடவு செய்ய தொடங்குகிறார்கள். இது குறித்து மஞ்சள் தோட்ட விவசாயி அறவாழி கூறியதாவது;-

கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து கிலோ ரூ.30-க்கு விதை மஞ்சள் கிழங்கு வாங்கி வந்து, பாத்திக்கட்டி தகுந்த இடைவெளி விட்டு மண்ணில் விதைக்கப்படுகின்றன. முதல் 20 நாட்களுக்கு தினமும் தண்ணீர் விட்டும், அதன் பின்னர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டும் மஞ்சள் செடிகள் வளர்க்கப்படுகின்றன. 30 நாட்கள் கழித்து மஞ்சள் செடிகளுக்கு மத்தியில் வளர்ந்து இருக்கும் களைகள் பறிக்கப்படுகிறது.பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வரும் மஞ்சள், மார்கழி மாதம் இறுதியில் அறுவடைக்கு தயாராகிறது. பொங்கலுக்கு 10 தினங்களுக்கு முன்பே மஞ்சள் குலை தயாராகிவிடும். வியாபாரிகள் இங்கு வந்து விவசாயிகளிடம் மஞ்சள் குலைகளுக்கு முன்பணம் கொடுப்பது வழக்கம். பின்னர் அவர்கள் பொங்கலுக்கு 3 அல்லது 2 தினங்களுக்கு முன்பு முழுத்தொகையையும் செலுத்தி மஞ்சள் குலைகளை அறுவடை செய்து செல்கின்றனர்.

இங்கு பயிரிடப்படும் மஞ்சள் தூத்துக்குடி உட்பட மாவட்டத்தின் முக்கிய ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்கப்படுகிறது. மேலும் மஞ்சள் குலைகளை ஓலைப்பாயில் சுற்றி லாரிகள் மூலம் டெல்லி, மும்பை, கல்கத்தா ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் 30 ஆயிரம் மஞ்சள் செடி பயிரிடலாம். தற்போது கடந்த ஆண்டு ஒரு மஞ்சள் குலை ரூ.20-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.30-க்கு விற்றால்தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story