கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா 3 பேர் கைது


கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 11:00 PM GMT (Updated: 13 Dec 2018 5:19 PM GMT)

கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தஞ்சை மட்டும் அல்லாது, திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, அரியலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவிகள் கிராமங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இக்கல்லூரியில் 150–க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 இதில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றும் சிலருக்கு கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

 இதற்காக கல்லூரியில் இளங்கலை பயிலும் மாணவிகளிடம் முதலாம் ஆண்டில் ரூ.500, 2–ம் ஆண்டில் ரூ.300 மற்றும் 3–ம் ஆண்டில் ரூ.300 என மொத்தமாக 3 ஆண்டுகளில் ரூ.1,100 வசூலிக்கப்படுகிறது. இதேபோல, முதுகலை அறிவியல் மாணவிகளுக்கு ரூ.1,000 கட்டணம் பெறப்படுகிறது.


இந்தநிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணமாக கூடுதல் நிதி வசூலிக்கப்படுவதை கண்டித்து நேற்று கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயலில் சிக்கி மிகுந்த பாதிப்புக்கு உள்ளான தங்களின் ஏழை பெற்றோர்களை துன்புறுத்தும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் என்ற பெயரில் 2 மற்றும் 3–ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய வசூலை கல்லூரி நிர்வாகம் திரும்ப பெறவேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் வலியுறுத்தினர்.

 மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பினர். இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் திருவள்ளுவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இதனால் கல்லூரியில் முதல் 2 மணி நேர வகுப்புகள் பாதிக்கப்பட்டன.


முன்னதாக மாணவிகளின் தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கல்லூரி முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்த தஞ்சை மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி, துணை செயலாளர் வீரையன், துணைத்தலைவர் அருண்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story