‘தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


‘தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2018 5:00 AM IST (Updated: 14 Dec 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

‘தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம்’ என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, சேலம் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் 30 டன் அரிசி மூட்டைகள் இரண்டு லாரிகளில் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி எடப்பாடியில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,

‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே ரூ.1½ கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிவாரணமாக இரண்டு லாரிகளில் 30 டன் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது’ என்று கூறினார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

கேள்வி:- மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு எப்படி உள்ளது?

பதில்:- மேகதாது பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாக கர்நாடக மந்திரி மீதும், அம்மாநில அரசின் அதிகாரிகள் மீதும், மத்திய நீர்வள குழும அதிகாரிகள் மீதும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேள்வி:- அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கு வர அழைப்பு விடுத்திருந்தீர்கள்? ஆனால், ஒரு சிலர் வேறு கட்சிக்கு போய்க் கொண்டிருக்கிறார்களே?

பதில்:- அது அவர்களுடைய விருப்பம். அழைக்க வேண்டியது எங்களுடைய கடமை. அ.தி.மு.க.என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கட்டிக் காத்த இயக்கம். ஆகவே, பிரிந்து சென்ற தொண்டர்கள் அனைவரும் எங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டுமென்று நானும், ஒருங்கிணைப்பாளரும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

அ.தி.மு.க.வுக்கு எப்போதும் ஒரே நிலைப்பாடு தான் உள்ளது. சமீபத்தில் அ.ம.மு.க.வில் இருந்து வந்தவர்கள் எனது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. ஏற்கனவே நான் கூறியதுபோல் தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அவர்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம்.

கேள்வி:- சிலை கடத்தல் வழக்கில் நீங்கள் மேல்முறையீடு சென்றதை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறதே?

பதில்:- நான் இன்னும் அதைப் பார்க்கவில்லை. எங்களுடைய வக்கீல்களிடம் முழு விவரமும் கேட்ட பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும்.

கேள்வி:- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதமாக செய்து கொண்டிருக்கிறீர்கள். இருந்தபோதும் குறைபாடுகள் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?

பதில்:- குறை சொல்வது எளிது, ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண பணிகளை அரசு செய்து கொண்டு இருக்கிறது. 2 லட்சத்து 21 மின்கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 1,600 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்திருக்கின்றன. 196 துணை மின்நிலையங்கள் பழுதடைந்து விட்டன. அதையெல்லாம் சரிசெய்து கொண்டிருக்கின்றோம். பெரும்பாலான இடங்களில் சரிசெய்யப்பட்டு விட்டது. ஒருசில கிராமங்களில் உள்ள வீடுகள், வயல்பகுதியில் இருக்கின்ற வீடுகள், தூரமாக இருக்கின்ற வீடுகளுக்கெல்லாம் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்இணைப்பு அளிப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிவாரணத் தொகையை பொறுத்தவரைக்கும், உரியவர்களுக்கு உரிய இழப்பீடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, கஜா புயலினால் வீடு இழந்தவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தருவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story