விமானப்படையில் சேர இளைஞர்களுக்கு எழுத்து தேர்வு
பாளையங்கோட்டையில் விமானப்படையில் சேர இளைஞர்களுக்கு மனநலம் மற்றும் எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
நெல்லை,
இந்திய விமானப்படையின் ஏர்மேன் குரூப் ‘ஒய்‘ தொழில்நுட்பம் இல்லாத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான தேர்வு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சென்னை, வேலூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடந்தது.
2-வது கட்டமாக நேற்று முன்தினம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், பெரம்பலூர், சேலம், நீலகிரி, தேனி, திருச்சி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடந்தது. விமானப்படை கமாண்டிங் அதிகாரி சைலேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தேர்வை நடத்தினர். முதல்கட்டமாக இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், உடல் எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டன. பின்னர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட உடல் தகுதி திறன் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்கட்ட எழுத்து தேர்வு நடந்தது. விடைத்தாள் உடனடியாக திருத்தப்பட்டு தேர்ச்சி பெறாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். முதல்கட்ட எழுத்துத்தேர்வில் 139 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு நேற்று 2-ம் கட்ட எழுத்து தேர்வு, மனநல தேர்வு ஆகியவை நடத்தப்பட்டது. இந்த தேர்வு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விடைத்தாள் உடனடியாக திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. விமானப்படை தேர்வு நடந்ததையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story