மூல நோய்க்கு மருந்தாக மூலிகை சாறை ஊசி மூலம் செலுத்தியதால் பெண் சாவு நாட்டு வைத்தியருக்கு வலைவீச்சு
மூல நோய்க்கு மருந்தாக மூலிகை சாறை ஊசி மூலம் செலுத்தியதால் பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக நாட்டு வைத்தியரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஆலங்குளம்,
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை மறவர் காலனியைச் சேர்ந்தவர் வேலுமணி (வயது 30), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காளஸ்வரி (25) பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் காளஸ்வரி கடந்த சில நாட்களாக மூல நோயால் அவப்பட்டு வந்தார். இதனால் காளஸ்வரிக்கு சிகிச்சை அளிக்க அவருடைய தந்தை சண்முகபாண்டியன், பரம்பரையாக நாட்டு வைத்தியம் பார்த்து வரும் கீழக்கலங்கல் பகுதியைச் சேர்ந்த அழகுதுரை (62) என்பவரை அழைத்துச்செல்ல முடிவு செய்தார். அதன்படி அழகுதுரையை, சண்முகபாண்டியன் தனது மகள் காளஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வீட்டில் வைத்து அழகுதுரை மூலிகையை அரைத்து அதில் உள்ள சாறை ஊசி மூலம் காளஸ்வரிக்கு போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்ட சிறிது நேரத்தில் காளஸ்வரி மயங்கி விழுந்தார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் நிலை மோசமானதால் உறவினர்கள் காளஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், காளஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதற்கிடையே அழகுதுரை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து சண்முகபாண்டியன் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய அழகுதுரையை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். மூல நோய்க்கு மருந்தாக மூலிகை சாறை ஊசி மூலம் செலுத்திய பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story