கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம் அன்புமணி ராமதாஸ் பேட்டி


கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2018 4:30 AM IST (Updated: 14 Dec 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம் என பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மீன்சுருட்டி,

மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவுக்கு, அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், பா.ம.க. சார்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி பேசினார். இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணிராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்புமணிராமதாஸ் பேசுகையில், இந்த விழாவில் குருவின் குடும்பத்தினர் பங்கேற்காதது மிகவும் வருத்தமாக உள்ளது. குருவிற்கு போலீஸ் மற்றும் அரசிடம் இருந்து நெருக்கடிகள், பயமுறுத்தல்கள் வந்தபோதெல்லாம் ராமதாஸ் ஆதரவாக இருந்து அவரை மீட்டார். வெளி உலகுக்கு குருவை தெரியவைத்ததே ராமதாஸ்தான். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை ராமதாஸ் எடுத்தார். ஆனால் அதற்கு குருவோ, அவரது குடும்பத்தினரோ ஒத்துழைக்கவில்லை என்றார். இந்த விழாவில் குருவின் குடும்பத்தில் இருந்து அவரது மனைவி சொர்ணலதா மட்டும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக தேர்தல் பணியாற்றி கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். தேர்தல் கூட்டணி சம்பந்தமாக தேர்தல் அறிவித்த பிறகு நாங்கள் முடிவு எடுப்போம். அதற்கு முன்பு யார் எதை கூறினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். யாருடனும் இதுவரை கூட்டணி குறித்து பேசவில்லை. இதற்கு மேலும் கூட்டணி பற்றிய செய்திகள் வந்தால் அது முற்றிலும் தவறானது. அவை வதந்திகள் அதை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story