மாவட்டத்தில் 11 மாதங்களில் சாலை விபத்துகளில் 377 பேர் சாவு உயிரிழப்பு குறைந்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 377 பேர் இறந்து உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் உயிரிழப்பு குறைந்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்தது. எனவே இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனால் இந்த ஆண்டு கடந்த 11 மாதங்களில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் நடைபெற்ற 450 பெரிய விபத்துகளில் 499 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு கடந்த 11 மாதங்களில் 350 பெரிய விபத்துகளில் 377 பேர் இறந்து உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டில் கணிசமான அளவு விபத்து உயிரிழப்பு குறைந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. அதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. ஏற்கனவே விபத்து நடந்த இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணம் ஆகும். குறிப்பாக குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்து நடந்து வந்ததால், அங்கு சாலையோரம் வசிப்பவர்களுக்கு வீடுதோறும் விழிப்புணர்வு நோட்டீசு வழங்கினோம்.
அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து, வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் ‘பேரிகார்ட்’ வைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் செல்வதற்காக விடப்பட்டு உள்ள இடைவெளியை போக்குவரத்துக்காக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் மழைநீர் செல்வதற்கான இடைவெளியை குறைக்குமாறு நெடுஞ்சாலையிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு திடீரென நுழைவதால் ஏற்படும் விபத்துகள் தடுக்கப்படும். மேலும் அதிகாலை நேரத்தில் டிரைவர்கள் தூங்குவதால் ஏற்படும் விபத்தை தடுக்கவும், காவல்துறை சார்பில் டிரைவர்களுக்கு தேநீர் வழங்கி, அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இதுவே விபத்துகள் குறைவதற்கு காரணம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற 1650 சிறு விபத்துகளில் 2,221 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த ஆண்டு கடந்த 11 மாதங்களில் 1,531 சிறு விபத்துகளில் 1,997 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story