சேலம்-கரூர் ரெயில்பாதை மின்மயமாக்கும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும் கோட்ட மேலாளர் தகவல்


சேலம்-கரூர் ரெயில்பாதை மின்மயமாக்கும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும் கோட்ட மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2018 11:00 PM GMT (Updated: 13 Dec 2018 8:05 PM GMT)

சேலம்-கரூர் ரெயில் பாதை மின்மயமாக்கும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ், உதவி கோட்ட மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை துணை வணிக மேலாளர் விசுவின் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், குறித்த நேரத்தில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறதா?, ரெயில் நிலைய தகவல் பலகையில் ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம், தாமதமாக வரும் நேரம் உள்ளிட்டவை பற்றிய தகவல் சரியான முறையில் தெரிவிக்கப்படுகிறதா? என்பன உள்ளிட்டவை பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் கோட்ட மேலாளர் சுப்பாராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-கரூர் ரெயில் பாதை மின்மயமாக்கும் பணி ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும். பணிகள் முழுமையாக முடிந்தபிறகு, ரெயில்வே அதிகாரிகள் சேலம்-கரூர் ரெயில்வே பாதையில் சோதனை ரெயில் ஓட்டத்தினை இயக்கி பார்க்க உள்ளனர். திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயிலில் கூட்டம் அதிகளவில் இருப்பதால் விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் ரெயில் நிலைய பயணிகளின் வசதிக்காக நடைமேடை மேம்பாலத்தின் மேல்பகுதிக்கும் செல்லும் வகையில் ‘லிப்ட்டு’ வசதி ஏற்படுத்தப்படும்.

பயணிகள் நலன் கருதி செயல்படாமல் உள்ள 2 ஏ.டி.எம். மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கரூர்-சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய ரெயில் இயக்குவது குறித்து ரெயில்வே வாரியம் தான் முடிவு செய்யும். பயணிகள் அத்தியாவசியம் கருதி புதிய ரெயில் இயக்க கருத்துரு அனுப்பி உள்ளோம். திருச்சியிலுள்ள கோவில்களுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் வகையிலும், முக்கொம்பு உள்ளிட்டவற்றுக்கு சுற்றுலா செல்லும் வகையிலும் சேலத்திலிருந்து புறப்பட்டு திருச்சிக்கு காலையில் செல்லும் வகையில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story