4–வது நாளாக கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்தம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்


4–வது நாளாக கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்தம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:30 PM GMT (Updated: 13 Dec 2018 8:19 PM GMT)

4–வது நாளாக கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு,

கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அனைத்து திட்டங்களும் கணினிமயமாக்கப்பட்டு வருவதால் கிராம நிர்வாக அலுவலகங்களில் கணினி வசதி ஏற்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு, பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 10–ந் தேதி தொடங்கியது.

இந்த போராட்டம் 4–வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 187 கிராம நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை மற்றும் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத்தலைவர் ஜான் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் பழனிவேல் கலந்துகொண்டு பேசினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் கிராம நிர்வாக அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்றிதழ் பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.


Next Story