செல்வாக்கு சரிந்ததை மறைக்க அமைச்சர் கந்தசாமி கலவரத்தை தூண்டுகிறார்; முன்னாள் அமைச்சர் ராஜவேலு குற்றச்சாட்டு


செல்வாக்கு சரிந்ததை மறைக்க அமைச்சர் கந்தசாமி கலவரத்தை தூண்டுகிறார்; முன்னாள் அமைச்சர் ராஜவேலு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Dec 2018 4:45 AM IST (Updated: 14 Dec 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கந்தசாமி தனது அரசியல் செல்வாக்கு சரிந்ததை மறைக்க கலவரத்தை தூண்டுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ராஜவேலு குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் உத்திரவேலுவின் மகன் லட்சுமிகாந்தன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரைநிலைக்கழகம் (பேட்கோ) மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்பில் ஊர் நுழைவுவாயில், அம்பேத்கர் உருவச்சிலை மற்றும் மணிமண்டபமும் கட்டப்பட உள்ளது. கிருமாம்பாக்கம் காலனி பகுதியில் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தொழிற்சங்க தலைவருமான உத்திரவேலு நினைவகத்தின் எதிரில் அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபம் கட்டுவதற்கு பேட்கோ நிறுவனம் இடத்தை தேர்வு செய்தது மிகவும் கண்டனத்திற்குரியது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காவும், சுதந்திரத்திற்காகவும், இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கரின் சிலையை வைப்பதற்கு நாங்கள் எந்தவித எதிர்வினையையும் ஆற்றவில்லை. மாறாக பேட்கோ நிறுவனம் தற்போது தேர்வு செய்துள்ள இடத்தை மாற்றக்கோரி எங்களின் எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறோம்.

தற்போது தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சிலையை வைக்காமல் அனைத்து தரப்பினரும் வணங்கும் வகையில் பொதுவான இடத்தில் சிலையை வைத்து அவரது புகழை இந்த உலகுக்கு பறைசாற்ற வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலத்தில் அம்பேத்கரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் நிலையும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலையும் ஏற்படும். எனவே யாருக்கும் இடையூறு இல்லாமலும் போக்குவரத்துக்கு எந்த இடைஞ்சலும் வராமலும் அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபத்தினை வேறு இடத்தில் கட்ட வேண்டும்.

இதற்கு மாறாக அமைச்சர் கந்தசாமி கிருமாம்பாக்கம் மந்தைவெளி திடலில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான குடிநீர் தேக்க தொட்டியையும், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் அரசு அனுமதி பெறாமல், எந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளார். கிருமாம்பாக்கம் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுக்கழிப்பிட கட்டிடத்தையும், சுற்றுச்சுவர் மதில்களையும் இடித்துள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அம்பேத்கர் தியாகத்தை போற்றுவதற்கும், நினைவிடங்கள் அமைப்பதற்கும் ஏற்ற இடங்கள் கிருமாம்பாக்கம் காலனி பகுதியில் இருந்தாலும் பிரச்சினையை உருவாக்கவேண்டும் என்றே அமரர் உத்திரவேலுவின் நினைவகத்தின் எதிரே தேர்வு செய்தது அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது.

தற்போது ஆளும் காங்கிரஸ் அரசில் சமூக நலத்துறை அமைச்சராக உள்ள கந்தசாமி உத்திரவேலுவின் பிறந்தநாளில் அன்னாரது அருமைபெருமையை கண்ணீர் மல்க பேசிவிட்டு தற்போது உத்திரவேலுவின் நினைவிடத்தினை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை ஏம்பலம் தொகுதி மக்களும், புதுவை மாநில மக்களும் அறிந்து வருகின்றனர்.

அமைச்சர் கந்தசாமி எப்போதெல்லாம் அரசியலில் தனது மக்கள் செல்வாக்கை இழக்க நேரிடுகின்றதோ, தனது பதவிக்கு ஆபத்து வருகின்றதோ அப்போதெல்லாம் கலவரத்தை தூண்டுவதும், மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதையும் தனது அரசியல் பாணியாக வைத்துள்ளார். தற்போது ஏம்பலம் தொகுதியில் மக்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கு சரிந்துபோனதை மறைப்பதற்காக அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கிறேன் என்று சாதி அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் எந்த மக்களும் அவரது நடவடிக்கைக்கு செவிசாய்க்க தயாராக இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story