மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2018 4:15 AM IST (Updated: 14 Dec 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

கிழக்கு கடற்கரை சாலையில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

கிழக்கு கடற்கரை சாலையில் தொடர்ந்து திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் மடிந்து வருகின்றனர். அங்குள்ள மதுக்கடைகளை அகற்றவேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கும் புதுவை அரசையும், கலால்துறையையும் கண்டித்து கருவடிக்குப்பம் சுடுகாடு அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாலா தலைமை தாங்கினார். மாநில தலைவர் மஞ்சினி முன்னிலை வகித்தார். இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:–

5 மாநில தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வியடைந்துள்ளது. இந்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இந்த நிலைமை ஏற்பட்டது. இது தற்காலிகமான தோல்விதான். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மாபெரும் வெற்றிபெறும். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார்.

கவர்னர் கிரண்பெடி புதுவை மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். ஆனால் அதை செய்யவிடாமல் முதல்–அமைச்சர் நாராயணசாமி தடுக்கிறார்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.


Next Story