ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில்: வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில்: வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2018 10:00 PM GMT (Updated: 13 Dec 2018 10:12 PM GMT)

ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

ஊட்டி, 

ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ரூ.4 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுகிறது.

முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் ரூ.90.2 லட்சம் மதிப்பில் எமரால்டு அணையில் இருந்து வெளியேறும் நீர் ஊருக்குள் வராமல் தடுக்க தடுப்புச்சுவர்கள் அமைத்தல், நேரு நகர் பகுதியில் ரூ.5.½ லட்சம் செலவில் நேரு நகர் முதல் மொத்தகொம்பை வரை பழுதுபார்ப்பு மற்றும் குழாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட சுரேந்தர் நகரில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு, தாய் திட்டத்தின் கீழ் சுரேந்தர் நகர் முதல் இத்தலார் வரை ரூ.1.43 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட நடைபாதை பணி, பெரியார் நகரில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு, தாய் திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ள பம்ப் அறை, குழாய் அமைக்கும் பணி நடக்கிறது.

போர்த்தி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நீர்தேக்க குழி, இத்தலார் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி மையம், துளித்தலையில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.294.74 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட துளித்தலை- புதுஹட்டி சாலை, அப்புகோடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.33.75 லட்சம் மதிப்பில் சாலை பணி, கல்லக்கொரையில் ரூ.2 லட்சம் செலவில் நீர்தேக்க குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட அலுவலரிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் பசுபதி, தாசில்தார் ஆனந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story