தமிழக மீனவர்களின் 47 படகுகளை கொண்டுவர மீட்பு குழு இலங்கை பயணம்
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளில் தகுதியான 47 படகுகளை மீட்டு கொண்டுவர அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழு விரைவில் இலங்கை செல்கிறது.
ராமநாதபுரம்,
இலங்கை அரசு கடந்த ஆண்டு 2 புதிய சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இதன்படி எல்லைதாண்டி வரும் மீனவர்களை கைது செய்வதுடன், படகுகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்குவது என்று சட்டம் இயற்றி அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில் அதற்கு முன்னதாக கடந்த 2015–ம் ஆண்டு முதல் சிறைபிடிக்கப்பட்டுள்ள 173 படகுகளை விடுவிக்க கடந்த செப்டம்பர் மாதம் 7–ந் தேதி புதிய உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 173 படகுகளை மீட்டு கொண்டு வரும் வகையில் அதன் தன்மை குறித்து ஆராய்வதற்காக அதிகாரிகள் தலைமையில் குழு இலங்கை சென்றது. இந்த குழுவினர் அங்குள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விரிவாக சோதனை செய்து பார்த்தபோது 53 படகுகள் மட்டுமே மீட்டு கொண்டுவரும் நிலையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் குழுவினர் அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு மேற்கண்ட படகுகளை மீட்டு கொண்டுவர அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்த 53 படகுகளில் 6 மீனவர்கள் தங்களின் படகுகளை இனி மீட்டு கொண்டுவருவதால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று தெரிவித்து விட்டனர். இதனால் மீதம் உள்ள 47 படகுகளை மட்டும் மீட்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இதற்காக அரசு பழுதுபார்க்கும் செலவு மற்றும் டீசல் உள்ளிட்டவைகளுக்காக ரூ.47 லட்சத்து 95 ஆயிரம் நிதி அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் 39 விசைப்படகுகளும், 8 நாட்டு படகுகளும் மீட்டு கொண்டுவரப்பட உள்ளன. இந்த படகுகள் அனைத்தும் இலங்கை புத்தளம், கல்பிட்டியா, தலைமன்னார், கிராஞ்சி, காரைநகர், காங்கேசன்துறை, திரிகோணமலை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை மீட்டு கொண்டுவர 47 விசைப்படகுகளுடன், 320 மீனவர்கள், ஆசாரிகள், மெக்கானிக்குகள் மற்றும் 6 அதிகாரிகள் கொண்ட குழு மீன்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் விரைவில் இலங்கை செல்ல உள்ளனர்.
இந்த படகுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டுவர முடியாது என்பதால் முதல் கட்டமாக 22 படகுகளும், 2–வது கட்டமாக 14 படகுகளும், 3–வது கட்டமாக 11 படகுகளும் கொண்டுவரப்பட உள்ளன. இந்த படகுகளில் 25 படகுகள் ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவை ஆகும். 15 படகுகள் நாகை, 5 படகுகள் புதுக்கோட்டை, 2 படகுகள் தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படையின் அனுமதி கிடைத்ததும் இந்த குழுவினர் விரைவில் இலங்கை செல்ல உள்ளனர்.