ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்ட விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை
விருதுநகர் பழைய பஸ் நிலையம் ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட போதிலும் பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட வில்லை. பயணிகள் தங்குமிடத்தில் இருந்த இருக்கைகளும் மாயமாகிவிட்ட அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்துதான் அனைத்து டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு புறநகர் பஸ்களும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து தான் புறப்பட்டு செல்கின்றன. விருதுநகரைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து வேலைக்கு வரும் மக்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் இப்பஸ் நிலையத்தை தான் பயன்படுத்தி வருகிறார்கள். தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இப்பஸ் நிலையத்தை பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது.
பயணிகள் பயன்பாட்டிற்கு தகுதி இல்லாமல் இருந்த இந்த பஸ் நிலையத்தை சீரமைக்கும் பணி நகராட்சி நூற்றாண்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. பஸ் நிலையத்தின் தரை தளத்தை உயர்த்தி சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டன. எம்.பி, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் பயணிகள் தங்கும் இடமும், ரூ.28 லட்சம் செலவில் நவீன கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பஸ் நிலைய சீரமைப்பு பணிக்கு முன்பு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3½ லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் பயன்பாட்டில் இருந்து வந்தது. சீரமைப்பு பணியின் போது குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் அகற்றப்பட்டன. சீரமைப்பு பணி முடிந்த பின்னர் மீண்டும் அந்த எந்திரங்கள் பொருத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் செயல்படும் என நகராட்சி அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சீரமைப்பு பணி முடிந்த பின்னர் அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இது பற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை சுட்டிக்காட்டப்பட்ட பின்னரும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் இந்த மையத்தில் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் எங்கே உள்ளன? என்று தெரியாத நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி முறையான விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீரமைக்கப்பட்ட பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக குடிநீர் மையம் அமைக்க வேண்டும் என பல முறை கோரப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பஸ் நிலையத்தின் தென்புறத்தில் அமைக்கப்பட்ட ஒரு குடிநீர் குழாயும் தற்போது செயல் இழந்து விட்டது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் தேவைப்படுவோர் பணம் கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்க வேண்டிய நிலை உருவாகிறது. அதுவும் அம்மா குடிநீர் வினியோகம் முறையாக இல்லாததால் அதிக விலை கொடுத்து தனியார் நிறுவன குடிநீர் பாட்டில்களை வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.
பஸ் நிலையத்தின் கிழக்கு புறமும், தென் புறமும் உள்ள பயணிகள் தங்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளும் மாயமாகி விட்டன. தற்போது இருக்கும் ஓரிரு இருக்கைகளும் சேதம் அடைந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்திலேயே நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் இருந்த போதும் முறையான கண்காணிப்பு இல்லாததால் பஸ் நிலைய தங்கும் இடமும் பயணிகளுக்கு வசதியாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் பெரும் பொருட் செலவில் பஸ் நிலையம் சீரமைக்கப்பட்ட போதிலும் பயணிகளுக்கு தேவையான குடிநீர்வசதி, கழிப்பறை வசதிகள் முறையாக இல்லாத நிலை உள்ளது.
நகராட்சி பஸ் நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மாவட்ட போக்குவரத்து துறை முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை பார்த்து தான் அங்கீகாரம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கண்காணிக்க வேண்டிய போக்குவரத்துதுறை அதிகாரிகளும், பராமரிக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகளும் பாராமுகமாகவே உள்ளதால் பொதுமக்கள் தான் அவதிப்பட வேண்டி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.