பட்டாசு தொழிலாளர்கள் மறியல் செய்யப்போவதாக தகவல்: திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு
பட்டாசு தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலால் திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகள் தற்போது மூடப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் 11–ந்தேதி முதல் மூடப்பட்டு இருப்பதால் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் தற்போது வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். சிலர் மாற்றுப் பணி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி திருத்தங்கல் பகுதியில் உள்ள பட்டாசு தொழிலாளர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கினர். ரெயில் நிலையம் வரும் பாதைகளில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதே போல் ரெயில் நிலையம் உள்ளே அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தனர்.
நடைமேடையில் நின்று கொண்டு இருந்த சிலரிடம் போலீசார் எந்த ஊருக்கு செல்கிறீர்கள், டிக்கெட் எடுத்துள்ளீர்களா என்று விசாரித்தனர். காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. இந்த ரெயிலை யாரும் மறிக்கவில்லை. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. இந்த ரெயிலையும் யாரும் மறிக்க வில்லை. திருத்தங்கல் ரெயில் நிலையத்திலும், ரெயில் நிலையம் வரும் வழிகளிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்களிடையேயும், ரெயில் பயணிகளிடையேயும் பரபரப்பு ஏற்பட்டது.