ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு; அதிகாரிகள் நடவடிக்கை


ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு; அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2018 4:45 AM IST (Updated: 14 Dec 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு கடை வைத்திருப்பவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை பல மாதங்களாக செலுத்த வில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சரவணன் உத்தரவுப்படி வருவாய் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி அலுவலர்கள் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதில் பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் இயங்கி வந்த ஒரு பர்னிச்சர் கடையினர் வாடகை செலுத்தாமல் இருப்பதை கண்டுபிடித்து அந்தக் கடைக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

வருவாய் அலுவலர்களின் திடீர் நடவடிக்கையால் அருகில் இருந்த கடைக்காரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தை செலுத்துவதற்கு உடனடியாக நகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர்.

இது குறித்து வருவாய் அலுவலர் சரவணன் கூறுகையில், “நகராட்சியின் கீழ் இயங்கி வரும் கடைகளின் உரிமையாளர்கள் குத்தகை பணத்தை செலுத்துவதில்லை. குறித்த காலக்கெடுவுக்குள் வாடகை பணத்தையும் செலுத்த வில்லை எனில் இனி வரும் காலங்களில் கடைகளுக்கு பூட்டு போடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே இந்த நடவடிக்கையை தவிர்க்கும் விதமாக கடைக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் குத்தகை பணத்தை உடனடியாக செலுத்திட வேண்டும்” என்றார்.


Next Story