ரூ.973 கோடி செலவில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவை : மத்திய, மேற்கு ரெயில்வே திட்டம்
ரூ.973 கோடி செலவில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவையை தொடங்க மத்திய, மேற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
மும்பை,
ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் சமீபத்தில் மத்திய, மேற்கு ரெயில்வே உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மும்பையில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவையை தொடங்குவது தொடர்பான திட்ட அறிக்கையை 2 வாரங்களுக்குள் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது மும்பையில் 12 பெட்டிகளுடன் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரெயில்வே மந்திரியின் உத்தரவுப்படி மத்திய, மேற்கு ரெயில்வே அதிகாரிகள் 15 பெட்டி ரெயில் சேவையை தொடங்குவதற்கான திட்ட அறிக்கையை உருவாக்கி உள்ளனர். மேலும் அந்த திட்டம் ஒப்புதலுக்காக ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு ரெயில்வே 2 கட்டங்களாக ரூ.490 கோடி செலவில் 15 பெட்டி ரெயில் திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. இதில் முதல் கட்டமாக அந்தேரி - விரார் இடையே 22 மின்சார ரெயில் சேவைகள் 15 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்கள் விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும் என மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்திர பாகர் கூறினார்.
மத்திய ரெயில்வே ரூ.483 கோடி செலவில் 3 கட்டங்களாக இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளது.
கல்யாண்- கசாரா, கல்யாண்- கர்ஜத் இடையே 15 பெட்டி ரெயில்களை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.