பெங்களூருவில் குடோனில் இருந்த இரும்பு சட்டங்கள் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் சாவு


பெங்களூருவில் குடோனில் இருந்த இரும்பு சட்டங்கள் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் சாவு
x
தினத்தந்தி 13 Dec 2018 11:58 PM GMT (Updated: 13 Dec 2018 11:58 PM GMT)

பெங்களூருவில் குடோனில் இருந்த இரும்பு சட்டங்கள் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிகேஹள்ளி கேட் அருகே மஞ்சுநாத் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் குடோன் அமைத்துள்ளது. குடோனில் சிகேஹள்ளி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பாதுகாத்து வைப்பது வழக்கம். இதற்காக அந்த குடோனில் இரும்பு சட்டங்கள் வரிசையாக அமைக்கப்பட்டு, அவற்றில் பிளாஸ்டிக் டப்பாக்களில் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த குடோனில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் பொருட்கள் அடுக்கி வைத்திருந்த இரும்பு சட்டங்கள் திடீரென்று சரிந்து வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதனால் இரும்பு சட்டங்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பிற பொருட்களுக்கு இடையில் சிக்கி கொண்டு தொழிலாளர்கள் உயிருக்கு போராடினார்கள்.

இதுபற்றி உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு காடுகோடி போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார்கள். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் நவீன கருவிகள் மூலம் இரும்பு சட்டங்கள் வெட்டி அகற்றப்பட்டன. சுமார் 3 மணிநேர போராட்டத்தை தொடர்ந்து 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள். மேலும் சிலர் இரும்பு சட்டங்கள், பொருட்களுக்குள் இடையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. பின்னர் மீட்பு குழுவினரின் நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து இரும்பு சட்டங்களுக்கு அடியில் சிக்கி இருந்த 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் உயிர் இழந்திருந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் ஒயிட்பீல்டு துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அகாத் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் காடுகோடி அருகே கொரலூர் கிராமத்தை சேர்ந்த பாரூக், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஞானதர்ஷன் மற்றும் சுபாஷ் ஆகிய 3 தொழிலாளர்களும் உயிர் இழந்தது தெரியவந்தது. மேலும் குல்தீப், ஜானகிராம், நாராயணசாமி, பாகுபலி, ரமாகாந்த் ஆகிய 5 தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் 5 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் குடோனில் 30 அடி உயரத்திற்கு இரும்பு சட்டங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்ததும், அவற்றில் பிளாஸ்டிக் டப்பாக்களில் ஆடைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை அடுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இரும்பு சட்டங்களில் அதிகஅளவு பொருட்கள் வைத்திருந்ததாலும், அதிக பாரம் காரணமாகவும் அந்த இரும்பு சட்டங்கள் வரிசையாக சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியதாலும், 3 பேர் உயிர் இழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடோனில் பணியாற்றிய அஜய் மற்றும் அமானுல்லா ஆகிய 2 அதிகாரிகளை காடுகோடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். குடோனில் இரும்பு சட்டங்கள் சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பெங்களூருவில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story