கழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: ஆம்பூர் மாணவியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு ‘இந்திய அளவில் பெருமை தேடிதந்துள்ளார்’


கழிவறை கட்டித்தராத தந்தை மீது புகார்: ஆம்பூர் மாணவியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு ‘இந்திய அளவில் பெருமை தேடிதந்துள்ளார்’
x
தினத்தந்தி 15 Dec 2018 4:30 AM IST (Updated: 14 Dec 2018 6:50 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் கழிவறை கட்டித்தராத தந்தை மீது போலீசில் புகார் அளித்த மாணவியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் ராமன், அவரை பாராட்டினார். அப்போது இந்திய அளவில் மாணவி பெருமை தேடிதந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இஷானுல்லாஹ். இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7), ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லாஹ் கூலி வேலை பார்த்து வருவதாலும், ஏழ்மையில் இருப்பதாலும் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றியும், 2–ம் வகுப்பு படிக்கும் ஹனீபாஜாராவும் திறந்த வெளியில் கழிப்பிடம் சென்று வந்தனர்.

திறந்த வெளியில் கழிப்பிடம் செல்வதை அவமானமாக கருதிய சிறுமி, தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தருமாறு கேட்டுள்ளாள். அதற்கு அவர் வகுப்பில் முதல் மார்க் எடுத்தால், வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் சிறுமி நன்றாக படித்து வகுப்பில் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்று வருகிறாள்.

இதனை தனது தந்தையிடம் சொல்லி வீட்டில் கழிவறை கட்டித்தர கேட்டுள்ளாள். ஆனால் அவர் கழிவறை கட்டித்தராத காரணத்தால் கடந்த 10–ந் தேதி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் தனது தந்தை மீது புகார் அளித்தாள். இதுபற்றி அறிந்ததும் கலெக்டர் ராமன், மாணவியின் வீட்டில் தனிநபர் கழிவறை திட்டத்தின் மூலம் உடனடியாக கழிவறை கட்டிக்கொடுக்க ஆம்பூர் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மாணவியின் வீட்டிற்கு சென்று கழிவறை கட்டித்தர நடவடிக்கை எடுத்தார். மேலும் ஆம்பூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராகவும் மாணவியை நியமித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் ராமன், மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவியை பாராட்டி சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து, பரிசும் வழங்கினார். பின்னர் மாணவி, கலெக்டரிடம் ஆட்டோ கிராப் வாங்கி கொண்டாள். மேலும் சிறுமியின் வீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மாணவி ஹனீபாஜாரா இந்திய அளவில் நமக்கு பெருமையை தேடி தந்துள்ளார். இதுபோன்ற விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும். ஆம்பூர் நகராட்சி பகுதியில் 779 தனிநபர் கழிவறை கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் 178 கழிவறை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 140 கழிவறை கட்டும் பணி நடந்து வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தில் நகர பகுதியில் கழிவறை கட்ட ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லாத காரணத்தால் பணியில் தாமதம் ஏற்படுகிறது. கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் ஆகும். மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை வழங்க தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்.

மேலும் ஆம்பூர் பகுதியில் பட்டா இருந்தும் வீடு இல்லாதவர்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 91 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 43 ஆயிரம் கழிவறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் முனைவர் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, தாசில்தார் சுஜாதா, துப்புரவு அலுவலர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story