மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து மேலும் 2 இளம்பெண்கள் தப்பி ஓட்டம்
வேலூர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து மேலும் 2 இளம்பெண்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள பெரியஅல்லாபுரம் பகுதியில் அரசு மகளிர் பிற்காப்பு இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் 60–க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்தில் இருந்த 17 வயது மதிக்கத்தக்க 2 இளம்பெண்கள் கடந்த 9–ந் தேதி திடீரென மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து பிற்காப்பு இல்ல கண்காணிப்பாளர் ரூபாவதி பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான 2 இளம்பெண்களை மீட்டனர்.
இந்த நிலையில் அதே பிற்காப்பு இல்லத்தில் இருந்து மீண்டும் 2 இளம்பெண்கள் தப்பிச்சென்றுள்ளனர். 15 வயது மற்றும் 19 வயது இளம் பெண்கள் இருவரும் நேற்று முன்தினம் பிற்காப்பு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 17.6.2018 முதல் இந்த பிற்காப்பு இல்லத்தில் தங்கி உள்ளனர். அவர்கள் தப்பிச்சென்றது குறித்து பிற்காப்பு இல்ல கண்காணிப்பாளர் ரூபாவதி பாகாயம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 2 இளம்பெண்கள் மாயமாகி மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 இளம் பெண்கள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.