எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு முதன்மையாக விளங்கி வருகிறது எடப்பாடி பழனிசாமி பேச்சு
எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு முதன்மையாக விளங்கி வருகிறது, என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரிப்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழங்க மலர் தூவி, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொன்னம்மாள் மற்றும் பலர் வரவேற்றனர்.
அங்கு நடந்த விழாவிற்கு கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ. சின்னதம்பி, கெங்கவல்லி எம்.எல்.ஏ. மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு முதன்மையாக விளங்கி வருகிறது. ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு எல்லாம் செயல் வடிவம் கொடுத்தது இந்த ஆட்சி. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் அ.தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது. அ.தி.மு.க. வில் குடும்ப ஆட்சி கிடையாது. இது மக்களுக்காக சேவை செய்யக்கூடிய இயக்கம். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இயக்கத்தை தாங்கிப் பிடித்து உள்ளனர். இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. கட்சியை உடைக்கவும் முடியாது.
கட்சியில் சாதாரண கிளை செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து முதல்-அமைச்சராகி உள்ளேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் எதிர் கொள்வோம்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. மக்களோடு மக்களாக இருந்து முதலமைச்சராக செயல்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. சொந்த காலில் நிற்கும் இயக்கம். மக்களோடு கூட்டணி வைத்துள்ள இயக்கம் அ.தி.மு.க.
இது எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியாது. எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத பெருமை சேலத்திற்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் தரமான, சிறப்பான சாலை உள்ள மாநிலம் தமிழகம். ஸ்டாலினுக்கு என்னை பற்றி பேசவில்லை என்றால் தூக்கம் வராது.
இந்தியாவிலேயே எளிதாக சந்திக்கக்கூடிய முதல்-அமைச்சர் நான் தான் இருக்கிறேன். என்னை யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்கலாம். கல்வி புரட்சி செய்து உயர்கல்வியில் முதன்மையான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என அரசியல் வாரிசு உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி இல்லை. மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளதோ அவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். எத்தனை துரோகிகள் வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. மத்தியில் நாங்கள் யாரை விரலை காட்டுகிறோமோ அவர் தான் பிரதமராக வர வேண்டும் என்ற நிலையை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், சேலம் எம்.பி. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், ராஜா, வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாத்திகுட்டை பகுதியில் மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் முருகேசன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியின்போது வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அசோக்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் வாசுதேவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கோபாலபுரத்தில் கும்ப மரியாதையுடன் மலர்தூவி, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர், கூட்டுறவு வங்கி தலைவர் அன்பரசு கலந்து கொண்டு வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் அர்ஜுனன், தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story