தொழிலாளி கொலையில் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பா? கலெக்டரிடம் மனைவி பரபரப்பு புகார்


தொழிலாளி கொலையில் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பா? கலெக்டரிடம் மனைவி பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 15 Dec 2018 4:15 AM IST (Updated: 14 Dec 2018 11:43 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி கொலையில் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொலையானவரின் மனைவி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்தவர் குரு. தொழிலாளியான இவர் கடந்த 12-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்த குருவின் மனைவி உஷா மற்றும் உறவினர்கள் நேற்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் நாட்டார்குளத்தில் வசித்து வருகிறேன். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் பணியாற்றி வரும் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் சிலர் சேர்ந்து எனது கணவரை கொலை செய்து விட்டனர்.

எனது கணவர் கொலைக்கு அந்த போலீஸ் அதிகாரி தான் காரணம். தற்போது நான் கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருகிறேன். இது தொடர்பாக அந்த போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எனது கணவர் உடலை வாங்க மாட்டேன். இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.

Next Story