கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை சங்கரன்கோவில் தொகுதி தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேட்டி
சங்கரன்கோவில் தொகுதி தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழும் என்று நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா கூறினார்.
நெல்லை,
இதுதொடர்பாக அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சங்கரன்கோவிலை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தி.மு.க.வில் தற்போது சேர்ந்து உள்ளார். அவர் தன்னை அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும், அ.தி.மு.க.வில் பல ஆண்டுகளாக உழைத்து, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற்றும் கடையநல்லூர் தொகுதிகளின் வெற்றிக்கு பாடுபட்டு இருப்பதாகவும் கூறிஉள்ளார். அவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் கிடையாது. அ.தி.மு.க. கூட்டம், போராட்டம் என எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றது கிடையாது. அவருடன் அ.தி.மு.க. வை சேர்ந்த யாரும் கட்சியில் இருந்து விலகி போகவில்லை. அவருக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
சங்கரன்கோவில் தொகுதி அ.தி.மு.க. கோட்டையாக உள்ளது. அதை யாராலும் அசைக்க முடியாது. 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும் கூட சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எனவே சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டையாக தொடர்ந்து திகழும், அதை யாராலும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு மற்றும் மகபூப் ஜான் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக நேற்று காலை தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் “துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் சீவலப்பேரி அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் திருடி, கேரளாவுக்கு கடத்துவதாக மாவட்ட கலெக்டரிடம் ஒருவர் மனு கொடுத்துள்ளார். இது ஆதாரமின்றி, உள் நோக்கத்துடன் கொடுக்கப்பட்ட மனு ஆகும். எனவே அந்த மனு கொடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story