பணகுடியில் தொழிலாளி மர்ம சாவு 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
பணகுடியில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணகுடி,
நெல்லை மாவட்டம் பணகுடி அழகியநம்பிபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 48). இவர் பணகுடியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை செங்கல்கள் வேக வைக்க தீ போடுவதற்கு சென்ற அவர், அங்கு தலையில் ரத்தக்காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் குருசாமி உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இதனை அறிந்த பணகுடி போலீசார் உடனடியாக விரைந்து சென்று, குருசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது அங்கிருந்து ஓடிச் சென்று மங்கம்மாள் சாலையில் வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதுபற்றி பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட சூப்பிரண்டு அருண்சக்திகுமார், கூடுதல் சூப்பிரண்டு அரிகர கிரண் பிரசாந்த் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story