ஜோலார்பேட்டை அருகே குவியல் குவியலாக மண்டை ஓடுகள், மாந்திரீக தகடுகள் புதையல் எடுக்க முயற்சியா?-பரபரப்பு


ஜோலார்பேட்டை அருகே குவியல் குவியலாக மண்டை ஓடுகள், மாந்திரீக தகடுகள் புதையல் எடுக்க முயற்சியா?-பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2018 4:30 AM IST (Updated: 15 Dec 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே மயானம் பகுதியில் குவியல் குவியலாக மனித மண்டை ஓடுகளும், மாந்திரீக தகடுகளும் கிடந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி கிராமத்தில் இருந்து ஏலகிரி கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலையோரம் மயானம் உள்ளது. நேற்று அந்த வழியாக பொதுமக்கள் சென்ற போது, மயானத்தின் இருபுறத்திலும் 3 இடங்களில் மனித மண்டை ஓடுகள் கிடந்தன.

இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பரபரப்பும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மண்டை ஓடுகளை பார்வையிட்டனர். சில மண்டை ஓடுகளில் ஒரு தாயத்து, செப்புகம்பி கட்டப்பட்டு இருந்தது. அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் எலும்பு துண்டுகளுடன் மாந்திரீக தகடுகளை சேர்த்து மாலைபோல் கட்டி மண்டை ஓடுகள் மீது போட்டு இருந்தனர். அதை தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு சென்று, தாசில்தார் முன்னிலையில் அனைத்து மண்டை ஓடுகளையும் சேகரித்தனர். அப்போது மொத்தம் 66 மண்டை ஓடுகள் இருப்பது தெரிந்தது. அத்துடன் எலும்பு துண்டு மாலைகள் மற்றும் மாந்திரீக தகடுகளையும் சேகரித்தனர். உடனடியாக அவற்றை பெரிய பள்ளம் தோண்டி புதைத்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து தாசில்தார் சத்தியமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘மனித மண்டை ஓடுகள் அதிகளவில் 3 இடங்களில் மர்ம ஆசாமிகள் வைத்திருப்பதாக தகவல் அறிந்ததும் பொதுமக்கள் மிகவும் அச்சப்பட்டனர். அதனால் உடனடியாக அவை புதைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்’ என்றார்.

இதற்கிடையே வேலூரில் இருந்து போலீஸ் துப்பறியும் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. எனினும் மண்டை ஓடுகள் புதைக்கப்பட்டு விட்டதால் துப்பறியும் நாயை திரும்ப அழைத்துச்சென்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமாவாசை என்பதால், மந்திரவாதிகள் மனித மண்டை ஓடுகள் வைத்து, மாந்திரீக வேலையில் ஈடுபட்டார்களா? அல்லது ஏதேனும் புதையல் எடுப்பதற்காக மண்டை ஓடுகளை வைத்து பூஜை செய்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? அல்லது நரபலி கொடுத்து உள்ளார்களா? என தெரியவில்லை. மேலும் இறந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள மண்டை ஓடுகள் வைத்து பூஜை செய்துள்ளதால் ஊருக்கு ஏதேனும் கேடு விளையுமா என தெரியவில்லை. இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story