ஊட்டியில் கடுங்குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி


ஊட்டியில் கடுங்குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 15 Dec 2018 4:45 AM IST (Updated: 15 Dec 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கடுங்குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை விட தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் குளிர்க்காலம் ஆகும். மலைப்பிரதேசமான ஊட்டியில் நடப்பாண்டில் கடந்த நவம்பர் மாதத்தில் உறை பனி தாக்கம் தொடங்கியது. அதன்பின்னர் சாரல் மழை பெய்ததாலும், பகலில் பனிமூட்டமாக காணப்பட்டதாலும் உறை பனி தாக்கம் இல்லை.

வழக்கமாக டிசம்பர் மாதம் என்றாலே உறை பனி தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது பகலில் வெயில் அதிகமாக அடிக்கும். ஆனால் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஊட்டி நகரில் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது காற்று வீசுவதால் ஊட்டியில் பகலிலேயே கடுங்குளிர் நிலவுகிறது. வெயில் அடித்தாலும் குளிர் அதிகமாக இருக்கிறது. இரவு நேரத்தில் நீர்ப்பனி தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் ஊட்டி நகரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கடுங்குளிர் காரணமாக கம்பளி ஆடைகள், தொப்பிகள், கையுறைகள் அணிந்து இருந்தனர். அவர்கள் குளிரின் மத்தியிலும் ஜப்பான் பூங்கா, பெரணி இல்லம், பெரிய புல்வெளி மைதானம், இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை, இலைப்பூங்கா, நியூ கார்டன் போன்றவைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் உயரமான மரங்களுக்கு இடையே பனிமூட்டம் சூழ்ந்ததால், அதனை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

ஊட்டியில் உயர்ந்த மலைப்பகுதியான தொட்டபெட்டா மலைசிகரத்தில், நகரில் நிலவும் குளிரை விட அதிகமாக குளிர் இருக்கிறது. அந்த காட்சி முனையில் எங்கு பார்த்தாலும் ஒரே பனிமூட்டமாக காணப்படுகிறது. இதனால் தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், கேத்தி பள்ளத்தாக்கு, அணைப்பகுதிகள் போன்றவற்றை காண முடியவில்லை. சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகள் அணிந்தபடி தொட்டபெட்டா மலைசிகரத்தை கண்டு ரசித்தனர். மேலும் கடுங்குளிரால் அவர்கள் அவதி அடைந்தனர். குளிரை தணிக்க சூடான உணவு பொருட்களை விரும்பி வாங்கி சாப்பிட்டனர். கடுங்குளிர் காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

Next Story