விருத்தாசலத்தில் ‘பிளாட்பாரம்’ மாறிநின்ற ரெயில்களால் பயணிகள் குழப்பம்; சேலம் செல்வதற்கு திருச்சி ரெயிலில் ஏறினர்
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நடைமேடையில் மாறிநின்ற ரெயில்களால் குழம்பிய பயணிகள், வேறுவேறு ரெயில்களில் மாறி ஏறிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள ரெயில் நிலையம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஏனெனில் சென்னை, தென்மாவட்டங்கள் மஃற்றும் சேலம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக விருத்தாசலம் ரெயில் நிலையம் அமைந்து இருக்கிறது. இதன் வழியாக ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதால், எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி ரெயில் நிலையம் பரபரப்புடன் இயங்கும்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயில் 2–வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. அதேநேரத்தில் திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரெயில் முதலாவது நடைமேடையில் இருந்து சென்றது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்தினர் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து இருக்கிறார்கள்.
அப்போது சேலம் செல்லும் பயணிகள் மாறுதலாக முதல் நடைமேடையில்(பிளாட்பாரத்தில்) இருந்து புறப்பட்ட திருச்சி பயணிகள் ரெயிலிலும், திருச்சி செல்ல வேண்டிய பயணிகள் சேலம் செல்லும் ரெயில் நிலையத்தில் 2–வது நடைமேடையில் இருந்தும் ஏறி சென்றனர்.
இந்த நிலையில் ரெயில் தாங்கள் செல்ல வேண்டிய பாதைக்கு மாறாக வேறு பாதையில் சென்றதால், பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதில் திருச்சி நோக்கி சென்ற ரெயில் விருத்தாசலத்துக்கு அடுத்துள்ள விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையத்தில் நின்றவுடன் அதில் சென்ற சேலம் பயணிகள் சுமார் 50 பேர் அங்கு இறங்கினர்.
இதேபோல் சேலம் ரெயிலில் சென்ற திருச்சி பயணிகள், ரெயில் புறப்பட்ட போது சுதாரித்துக்கொண்டு ஓடும் ரெயிலில் இருந்தே வேகவேகமாக விருத்தாசலம் ரெயில் நிலையத்திலேயே இறங்கி விட்டார்கள்.
டவுன் ரெயில் நிலையத்தில் இருந்த சேலம் பயணிகள், அங்கிருந்து பஸ் மூலம் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டது என்று விளக்கம் அளித்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, அவர்களை அங்கிருந்து கலைந்து போக வைத்தனர்.
வழக்கமாக விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் இருந்து தான் சேலம் பகுதிக்கு செல்லும் ரெயில்களும், 2 மற்றும் 3–வது நடைமேடை பகுதியில் இருந்து சென்னை, மற்றும் திருச்சி நோக்கி செல்லும் ரெயில்களும் செல்வதுண்டு. இதுதான் இங்கு எழுதப்படாத ஒரு விதியாகவே இருந்து வருகிறது. எனவே பயணிகளும் அந்தந்த நடைமேடை பகுதிக்கு சென்று ஏறி சென்றுவிடுவார்கள்.
நேற்றும் வழக்கம் போல், சேலம், திருச்சி வழக்கம் போல் அந்தந்த நடைமேடைகளில் புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் சேலம் நோக்கி செல்ல வேண்டிய ரெயில் பெட்டிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் இதை சரிசெய்வதற்காக அந்த ரெயில் திருச்சி நோக்கி இயக்கப்பட்டது. அதே நேரத்தில் திருச்சி நோக்கி செல்ல வேண்டிய ரெயில் சேலம் நோக்கியும் மாற்றி இயக்கப்பட்டது. இதுபற்றி முன்அறிவிப்பும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இதை பயணிகள் சரியாக கவனிக்க தவறிவிட்டதாக தெரிகிறது. திடீரென ரெயில் புறப்படும் இடத்தை மாற்றி அமைத்ததால், இதை அறியாத பயணிகள் குழப்பத்தில் ரெயில் மாறி ஏறிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற நிலை ஏற்படமல் தவிர்க்க பயணிகள் ரெயில் நிலையத்தில் தெரிவிக்கப்படும் அறிவிப்பை முறையாக கவனிக்க வேண்டும், அப்போது தான் இதுபோன்ற குழப்பத்திற்கு ஆளாகாமல் நம்மை பார்த்துக்கொள்ள முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.