ஏரியில் மூழ்கி பலியான மாணவனின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை; உறவினர்கள் புகார்


ஏரியில் மூழ்கி பலியான மாணவனின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை; உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:45 PM GMT (Updated: 14 Dec 2018 10:45 PM GMT)

ஏரியில் மூழ்கி பலியான மாணவனின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறவினர்கள் புகார் கொடுக்க வந்தனர்.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி அருகே உலகலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் நவீன்குமார் (வயது 13). இவன் தொரவி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 12–ந் தேதி அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்ற மாணவன் நவீன்குமார், நீரில் மூழ்கி பலியானான். அன்று இரவு நேரம் ஆகிவிட்டதால் நவீன்குமாரின் உடலை ஏரியில் இறங்கி தேடவில்லை. நேற்று முன்தினம் காலை தீயணைப்பு துறையினர் வந்து ஏரியில் இறங்கி நவீன்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நவீன்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவன் சிறுவயதில் இருந்தே பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்ததால் தொரவி கிராமத்திலேயே அடக்கம் செய்து கொள்வதாக கூறி மாணவனின் தாய் சம்மதத்துடன் தொரவிக்கு எடுத்துச்சென்று விட்டனர்.

இதற்கு மாணவனின் தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நவீன்குமாரை சொந்த ஊரான உலகலாம்பூண்டியில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று முறையிட்டனர். இதனால் மாணவனின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் மாணவனின் தந்தை சந்திரசேகர் தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தார். அவர்களிடம் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவன் இறந்து 2 நாட்கள் ஆகிறது. அவனை நல்ல முறையில் உடல் அடக்கம் செய்யுங்கள், இறந்த பிறகு உடலை வைத்துக்கொண்டு பிரச்சினை செய்வது நல்லதல்ல என்று போலீசார் தகுந்த அறிவுரை கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மாணவின் உடல் பாட்டியின் ஊரான தொரவியிலேயே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.


Next Story